கோயம்புத்தூர்: கோவை பேரூர் பகுதியில் பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில், நொய்யல் திருவிழா நடைபெற்று வருகிறது. 5ம் நாளாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்று நாடெங்கும் ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் அனைத்து மகள் இருக்கும் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என அவரது வாழ்த்தை தெரிவித்தார். "கரூர் காரனாக இருந்து, இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறேன். பேரூருக்கும் கரூருக்கும் ஒரு பந்தம் உள்ளது. காமதேனு பேரூர் பட்டீசுவரர் சாமியை தரிசனம் செய்து விட்டு நொய்யல் நதிக்கரை ஓரமாக வந்து, கரூர் பசுவதீஸ்வரர் ஆலயத்தில் ஐக்கியமானார் என்பது சரித்திர செய்தி.
இந்தியாவில் NGO க்கள் மூலம் எத்தனையோ நதிகளை நாம் மீட்டெடுத்துள்ளோம். சபர்மதி நதி சாக்கடையாக இருந்தது. நம் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, கரும் பலத்தோடு சபர்மதி நதியை கையில் எடுத்து, இன்று சந்தனம் மனக்கின்ற நதியாக மாற்றி உள்ளார். நொய்யல் நதிக்கரையோரத்தில் வருகின்ற காலத்தில், இந்திய பிரதமரும் வேறு நாட்டு அதிபரும் அமர்ந்து பேசுவார்கள். பாலாறில் இது போன்று ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். தற்போது அங்கு நீர் ஓடுகிறது.
அரசு என்பது ஒரு இயந்திரம் தான், அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசின் மீது பழி போடுவது, நம்முடைய இயலாமை என்று தான் கூறுவேன். 99% அணைகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. திருப்பூர் பகுதிகளில் எல்லாம் அணைகள் பயனற்று போய்விட்டதாகவும் நச்சு பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சினைகள் உள்ளன. தாமிரபரணி நதியை இந்தியாவில் மூன்றாவது நச்சு நதி என ஆய்வு கூறுகிறது. மற்ற மாநிலங்களை விட தொழில்துறை நம்பி இருக்கும் மாநிலம் நம் மாநிலம்.
கடந்த 60,70 ஆண்டுகளாக நதிகளை நாம் நச்சுபடுத்தி உள்ளோம். அதனால் தான் அதிக நச்சு தன்மை உள்ள நதிகளில் தமிழகம் கடைசி இடத்திற்கு ஒரு படி முன்னிருக்கிறது. எனவே நாம் நமது Development Model யை Question செய்ய வேண்டி உள்ளது. நம்முடைய Development Model என்பது, எந்த அளவிற்கு அடுத்த தலைமுறை வளங்களை இந்த தலைமுறை சுரண்ட முடியும், எந்த அளவிற்கு மாநகராட்சி அரசு நிர்வாகம், தண்ணீரை சுத்தப்படுத்தி ஆற்றுக்குள் விட வேண்டிய பொறுப்பு இருக்ககூடிய மாநகராட்சிகளே எத்தனை இடங்களில் சுத்தபடுத்தாமல் தண்ணீரை விடுகிறார்கள் என்ற கேள்வியை கேட்க வேண்டும். அரசிடம் கோரிக்கை வைத்து தேர்தல் காலத்தில் வாக்குறுதியாக, அளித்து இதனை சரிசெய்ய முடியாது என்பதை இவர்கள் 30 ஆண்டுகளாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் அனைவரும் அரசு, அரசியலை தாண்டி நம்பிக்கையோடு நொய்யலில் கை வைக்க வேண்டும். முதலில் பிளாஸ்டிக் போன்றவற்றை நதியோரம் வீசி செல்லும் தவறை நிறுத்த வேண்டும். சங்க இலக்கியங்களில் நொய்யல் நதிக்கு 'காஞ்மா நதி' என பெயர் வைக்கப்பட்டிருந்தது. கொங்கு சமுதாயத்தின் ஒரு அடையாளமாக நொய்யம் நதி உள்ளது. 3.2 ட்ரில்லியன் டாலராக இந்தியா இன்னும் 5 ஆண்டுகளில் 8 ட்ரில்லியன் டாலராக போகிறது. உலகின் மூன்றாவது நாடாகா மாறிவிடுவோம். எவ்வளவு பெரிய நாடாக மாறினாலும் நதி இல்லை என்றால் அழகில்லை. சீனா போன்று மாறிவிடுவோம்.
2047க்குள் உலகின் முதன்மை நாடாக வரும் போது Average median age 50யை தாண்ட கூடாது என்பது பிரதமரின் முதல் சங்கல்பம். கனிமவளங்களை சுரண்டியும் இயற்கைக்கு கேடு விளைவித்தும் வளரக் கூடாது என்பதும் பிரதமரின் சங்கல்பம்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் பேரூர் ஆதினம், இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், உட்பட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காவடி ஆடும் குழுவினருடன் இனைந்து காவடி ஆட்டம் ஆடினார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பின் வருமாறு பேசியதாவது.
விலை குறையும் சமையல் எரிவாயு: "LPG சிலிண்டர் விலை நேரடியாக 200 ரூபாய் குறைக்கப்படும். இந்த அறிவிப்பு நாட்டின் 33 கோடி குடும்பங்களுக்கும் அமல்படுத்தப்படும். 200 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கிற்கு வந்துவிடும். மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் யாரெல்லாம் சிலிண்டர் பெற்றுள்ளார்களோ, அவர்களுக்கு கடந்த நான்கு ஐந்து மாதங்களாக வழங்கப்பட்டு வந்த 200 ரூபாய், தற்போது கூடுதலாக மேலும் ஒரு 200 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இதுவரையில், சராசரியாக 37 லட்சம் குடும்பத்தினர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்றுள்ளனர். இதனை நாம் அனைவரும் நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். உலகில் ரஷ்யா உக்கரைன் போருக்கு பிறகு Natural gas, LPG கேஸ்-ன் விலை 200 சதவிகிதம் எல்லாம் ஏறிய போதிலும் கூட, மத்திய அரசு அதனை பெரிய அளவில் ஏறவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். இருப்பினும் அது சாமானிய மக்களுக்கு சுமையாகவே இருந்தது. இதனை மக்களும் பலமுறை அரசிடம் தெரிவித்து வந்தனர்.
மத்திய அரசு இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நம் பிரதமர் எப்படி கடந்த தீபாவளியன்று பெட்ரோல் டீசல் விலையை குறைத்தார்களோ, அதே போல் இந்த ரக்ஷா பந்தன், ஓணம் திருநாளில் கேஸ் விலையை குறைத்துள்ளார்கள். மேலும் வருகின்ற காலங்களில் கேஸ் விலையை மேலும் குறைப்பதற்கு தற்போது உள்ள சப்ளையர்களை தாண்டி, வேறு நாட்டில் இருந்து வாங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
அனல் பறக்கும் அம்ரூத் திட்ட செயல்பாடு: தொடர்ந்து பேசிய அவர், "கோவையில் ஒரு பக்கம் விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100% முடிக்கப்பட்டுள்ளது. அதற்கான இழப்பீட்டுத் தொகையும் மக்களுக்கு கொடுக்கும் பணிகளும் நடைபெற்ற வருகிறது. அதே நேரத்தில் விமான நிலையத்தில் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சனை Code Share உள்ளது.
மேலும், அம்ருத் ரயில் நிலையங்களை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் விரிவாக்க பணிகள் 25 ஆயிரம் கோடிக்கும் மேல் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேலைகள் செய்ய ஆரம்பித்தோம். இந்த அம்ருத் ரயில் நிலையத்தில் கோவை ரயில் நிலையம் இல்லை என்று பலராலும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கான கேள்வியை நாங்கள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் முன் வைக்கும் பொழுது அந்த அதிகாரிகள், 'கோவையில் இருந்து 34 ரயில்களின் புறப்படுகிறது. 96 ரயில்கள் கோவை வழியாக செல்கிறது. கோவையில் புதிதாக ரயிலை இயக்குவதற்கு இடம் கிடையாdhu' எனத் தெரிவித்தனர்.
அப்படி இருந்தும் நாம் 'வந்தே பாரத்' ரயிலை கோவைக்கு இயக்கியுள்ளோம். எனவே கோவைக்கு அருகில் உள்ள போத்தனூர் ரயில் நிலையத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதனை விரிவாக்கம் செய்யும் பணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கோவையை பொருத்தவரை இரண்டு பெரிய ரயில் நிலையங்கள் கிடைக்கும். 24 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்கின்ற முயற்சியை ஒரு கட்சியாக நாங்கள் கையில் எடுத்துள்ளோம். நாளை மறுநாள் பியூஸ்கோயல் கோவை வருகிறார். அவருடன் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு தொழிலிலதிபர்கள் கலந்துரையாட உள்ளனர். மேலும் அன்றைய தினம், இந்தியாவின் முதல் நிதி அமைச்சரான கோவையை சேர்ந்த சண்முகம் செட்டியின் திருவுருவ சிலையையும் திறந்து வைக்க உள்ளார்" என்று கூறினார்.
என் மண், என் மக்கள் பாதயாத்திரை: " 'என் மண் என் மக்கள்' முதல் கட்ட பாதயாத்திரையை பொறுத்தவரை மிகவும் கடுமையாக இருந்தது. குறிப்பாக தென் தமிழகத்தில் 40°க்கும் மேல் அனல் பறக்கக்கூடிய இடங்களில் இந்த பாதயாத்திரை நடைபெற்றது. அதே சமயம் மக்களின் ஆதரவும் பெரிதளவில் கிடைக்கப்பெற்றது. அதுமட்டுமின்றி மக்களும் கலந்து கொண்டது எல்லாம் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. தென் தமிழகத்தில் பாஜக வேரூன்றி இருக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் அதிகமான பிரச்சனைகளும் தென்தமிழகத்தில் உள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பு, தண்ணீர் பிரச்சனை, விவசாய வளர்ச்சி ஆகியவை எல்லாம் தென் தமிழகத்தில் பெரும் சவாலாக உள்ளது.
அதனால் தான் தென் தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும் பொழுதும், அங்குள்ள பிரச்சனைகளுக்கு ஏற்ப மத்திய அமைச்சர்களை அழைத்து வந்தோம். பாதயாத்திரை செல்லும் பொழுது அனைவரும் பிரதமர் நன்றாக செயல்படுகிறார். ஆனால் சிலிண்டர் விலையை மற்றும் குறைத்தால் நன்றாக இருக்கும் என கூறினார்கள். நானும் அவர்களிடம் பிரதமர் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்தேன். தென்காசியில் செப்டம்பர் 4ம்தேதி இரண்டாம் கட்ட பாதயாத்திரை துவங்கி 19ஆம் தேதி கோவைக்கு வந்து விடுவோம். இங்கேயும் பல்வேறு மக்களை சந்தித்து குறைகளை கேட்க கூடிய அறிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறோம்" என ஆக்கபூர்வமாக பாதயாத்திரை குறித்த தகவலை தெரிவித்தார்.
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா: தொடர்ந்து பேசிய அவர், "நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம் மத்திய அரசுக்கு ஒரு பவர். மாநில அரசுக்கு ஒரு பவர் என்று தான் உள்ளது. ஆனால் இங்கு ஒரு மாநில அரசு தன்னிச்சையாக தண்ணீர் வழங்க மாட்டேன் என்று கூறும் பொழுது, அது அரசியலமைப்பு சட்டத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி. பலமுறை ஆட்சியில் இருந்த கட்சி தான். கர்நாடக முதல்வரும், துணை முதல்வரும் புதிதானவர்கள் அல்ல. காவிரி நீர் பிரச்சினையைப் பொறுத்தவரை, இவர்கள் ஏதோ சிறு பிள்ளைகள் வந்து அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க மாட்டேன், காவிரி நீர் மேலாண்மையை மதிக்க மாட்டேன் என்று சொல்வது போல் உள்ளது.
உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கூறிவிட்டால், இப்பொழுது கர்நாடகா என்ன சொல்லும்?. இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே கர்நாடகா அரசு கேள்விக்குறியாக்குகிறது. தமிழ்நாட்டை போன்று கர்நாடகாவிற்கும் இரண்டு மூன்று மாநிலங்களில் இருந்து தண்ணீர் உள்ளே வருகிறது. அந்த மாநிலங்களும் கர்நாடகாவிற்கு, இது போன்று கூறிவிட்டால் என்ன செய்வார்கள்?.
தமிழகத்தில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியினர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை புரிந்து கொண்டு கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொல்ல வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று அன்று பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார். அப்போது தமிழக பாஜகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் இருந்து மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று காவிரி நீர் மேலாண்மை கூறியது. அதனை பாஜக ஏற்றுக் கொண்டு செயலாற்றியது.
ஒரு நாடு ஒரு ரேசன் கார்டு திட்டம்: வட மாநிலத்தில் இருந்து யாராவது தமிழகத்திற்கு வந்தால், அவர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். 15 லட்சத்திற்கும் மேல் வடமாநில தொழிலாளர்கள் இங்க இருப்பதாக மாநில அரசு புள்ளி விபரங்கள் கூறுகிறது. மத்திய அரசை பொருத்தவரை 'ஒரு நாடு ஒரு ரேசன் கார்டு' என்பதை கூறுகிறது. இதனால் ஒருவர் எங்கிருந்தாலும் ரேசன் பொருட்களை பெற்று கொள்ள முடியும். இதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் தவறாக புரிந்து கொண்டு, விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற் கொண்டு வருகிறார்கள். அதேபோல் கல்வியை பொறுத்தவரை வீடு தேடி கல்வி என்பதை மத்திய அரசு கொரோனா காலத்தில் கொண்டு வந்தது. இதனை மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொது விழிப்புணர்வு அனைவரிடத்திலும் உள்ளது.
10 லட்சத்து 76 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு வந்துள்ளது என்று நான் ஒரு புள்ளிவிவரத்தை பாதயாத்திரைக்கு முன்பு கொடுத்து இருந்தேன். ஆனால் தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்ததால், மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு எவ்வளவு கொடுத்தது என்று முதல்வரும் அறிவிக்க வேண்டும். 'மருத்துவக் கல்லூரிகளாகட்டும், ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் ஆகட்டும், 'அம்ருத் திட்டங்கள்' ஆகட்டும், எதை எடுத்துக் கொண்டாலும் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காதது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
திமுக குட்டை உடைக்கும் வெள்ளை அறிக்கை: 10 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கான புள்ளி விவரத்தை வெள்ளை அறிக்கையாக இன்னும் 24 மணி நேரத்தில் பாஜக கட்சி வெளியிடும். முதலமைச்சர் பேசுவதில் அதிகமாக பொய் உள்ளது. முதலமைச்சர் எதைப் பேசுவதற்கு முன்பும் ஒரு முறை கிராஸ் செக் செய்ய வேண்டும் அல்லது உடன் இருக்கக்கூடிய அதிகாரிகள் அந்த பேச்சை வெட்டு செய்ய வேண்டும். ஒரு அரசியல் பேசுவதற்காக எதை எதையோ பேசி முதல்வர் சிக்கலில் சிக்க போகிறார். திமுக வந்த பிறகு பொய் அதிகமாக பேச துவங்கி விட்டார்கள். ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல. நாங்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியிடும் வெள்ளை அறிக்கை அதிகாரிகளிடமும் கொடுத்து, பின்னர் அதிகாரிகள் அந்த அறிக்கை பொய் என்று சொல்லட்டும் மேற்கொண்டு பார்த்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடைபெறும் சாலை என்று பார்த்தால் கோவை-கரூர் சாலை தான். எனவே விரைந்து சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்று நானே நேரடியாக இரண்டு முறை மத்திய அமைச்சரை சந்தித்து இருக்கிறேன். தற்பொழுது நிலம் கையகப்படுத்துவது தான் பிரச்சனையாக உள்ளது. இரண்டு முறை இந்த அரசு அந்த நிலம் கையகப்படுத்தும் Format யை மாற்றியது. இதே கோவையை சேர்ந்த எம்பி திட்டம் வரக்கூடாது என்று போராட்டமும் மேற்கொண்டார். தமிழக அரசியலுக்காக அதிகாரிகளை நியமித்து நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதபடுத்த வேண்டும்.
திமுக ஊழல் பட்டியலை பொருத்தவரை ஒரு முறை நேரடியாக வழங்கினோம். அடுத்த கவர்னரிடம் வழங்கிவிட்டு முக்கியமானவற்றை வெளியிட்டோம். அடுத்த முறை CBI விசாரணை கூட கேட்கலாம். DVAC நாங்கள் அளித்த 6 புகார்களை முழுங்கி ஏப்பம் விட்டபடி அப்படியே வைத்துள்ளார்கள். PGR யை பற்றி நாங்கள் தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கிறோம். இன்று மாநில அரசும் வந்த காண்ட்ராக்ட் வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
பாஜகவின் இஸ்ரோ பெருமை: பாஜக, திமுக கட்சியின் மீது ஊழல் பட்டியல் வெளியிடுகிறது என்று குற்றம் சாட்டும் சீமான், அவரே அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடட்டுமே. நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம். அதில் குற்றம் குறைகள் சொல்லலாம். ஆனால் சீமான் ஏதாவது வெளியிட்டுள்ளாரா என்பது தான் எங்களுடைய கேள்வி. ISRO வை நேரு தான் ஆரம்பித்தார் என்று காங்கிரஸ் கட்சியினர் பேசுகிறார்கள். நான் யாரைப் பற்றியும் குறை சொல்லவில்லை. அனைத்து தலைவர்களும் நாட்டிற்கு தேவைதான். மோடி அரசை பொருத்தவரை எந்த துறைக்கு நிதி ஆதரவு கொடுக்க வேண்டுமோ, அந்தத் துறைக்கு நாம் வழங்குகிறோம்.
ISRO விற்கு கடந்த 9 ஆண்டுகளில் 442 தனியார் சேட்டிலைட்டுகள் அனுப்பி உள்ளோம். அதில் 389 யை ISRO அனுப்பி உள்ளது. ISROவின் நிதி ஆதரவை மோடி உயர்த்தி உள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 70 ஆயிரம் கோடி பெட்ரோலுக்கு மாணியம்(சப்சடி) இருந்தது. நம்முடைய அரசை பொருத்தவரை மாணியம் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு தான் அளிக்கிறோம். மாணியத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் பார்வை வேறு பாஜக பார்வை வேறு.
மோடியா...? சீமானா...? களமிறங்கும் கதைகள்: 2022ம் ஆண்டு ஜூன் மாதம், பிரதமர் மோடி 2023 டிசம்பர் மாதம் முடியும் தருவாயில் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்று கூறினார். தற்போது வரை 5 லட்சத்தி 50ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே தற்போது வரை தூங்கிவிட்டு வேலை வாய்ப்பு என்பது ஒரு டிராமா என்று ட்விட் பதிவிடுகிறார்.
சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும் அவர் போட்டியிட்டு தோற்க தானே போகிறார். அவருக்கு வாயுள்ளது பேசுகிறார். எந்த ஊருக்கு போகிறோம் என்று வழி தெரிந்தால் கடினம். ஆனால் எந்த ஊருக்கு போகிறோம் என்பதே தெரியவில்லை என்றால் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் தானே, சீமான் மீது எனக்கு மதிப்புள்ளது. ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன?.
மோடி வாரணாசியில் போட்டியிட்டு அதனை அடிப்படையில் இருந்து வளர்ச்சி மிகும் வகையில் மாற்றி விட்டார். ராமநாதபுரத்தை பொறுத்தவரை, இந்தியாவினுடைய மோசமான 112 மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றாக உள்ளது. அதுபோல தான் விருதுநகரும் உள்ளது. எனவே பிரதமர் இங்கே நிற்க வேண்டுமென்று மக்கள் விருப்பப்படுகிறார்கள். திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே. அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே, பிரதமர் என்ன ஊழல் செய்தார்?. சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்?" என சிமானுக்கு கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: