கோவை: கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்திருந்த பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "திமுகவின் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்த பெண் ஊடகங்களிடம் பேசி இருக்கின்றார்.
பட்டியல் சமூகத்தை சேர்ந்த அந்த பெண்ணை, தனக்கு சிகரெட்டால் சூடு வைத்தார் என்றும், 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொல்லிவிட்டு ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்தாவும் தெரிவித்து இருக்கிறார். ஆனால், இது தொடர்பக இன்னும் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதை பா.ஜ.க சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் தமிழகம் வருகிறார். பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதலில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நாளை துவக்கி வைக்கின்றார். மேலும், ராமருக்கு தொடர்புடைய கோயில்களுக்கு பிரதமர் மோடி சென்று கொண்டிருக்கிறார். அந்த வகையில், ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் செல்கின்றார்.
அதன் பின்னர், தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயில் சென்று விட்டு, அங்கிருந்து அயோத்தியா செல்கின்றார். பிரதமர் மோடி அயோத்தியா கோயில் விழாவுக்கு செல்லும் முன்பு, தமிழகம் வருகை தருவது சிறப்புக்குறியது. இது தமிழகத்தின் மீது அவர் வைத்து இருக்கின்ற அன்பைக் காட்டுகின்றது" எனத் தெரிவித்தார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராமர் கோயில் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அயோத்தி ராமர் கோயில் குறித்துப் பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தப் பின் எத்தனை கோயில்களை இடித்தனர். மக்கள் தரப்பில் இருந்து பெரிய அளவில் எதிர்ப்பு வந்தப் பின்புதான், இடிப்பதை நிறுத்தி வைத்துள்ளனர். ஆக உதயநிதியும், திமுகவும் இடிப்பு குறித்துப் பேச தகுதி அல்லாதவர்கள்" என்று கடுமையாக சாடினார்.
மேலும், திமுக பைல் (DMK Files) குறித்து பேசும் போது, "மொத்தம் ஒன்பது பைல்கள் வெளியான பின்பு, மீடியா முன்னர் தெரியப்படுத்த இருக்கின்றோம். 2ஜி வழக்கில் என்ன நடந்தது என்ற டேப் வெளியிட்டு இருக்கின்றோம். திமுக இந்த டேப்பிற்கு பதில் சொல்ல வேண்டும். முதலமைச்சரின் தனிப்பட்ட உதவியாளரும் இந்த டேப்பில் பேசி இருக்கின்றனர். மக்கள் அதைப் பார்க்க வேண்டும்" எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், "அண்ணாமலைக்கு முதலமைச்சர் ஆகும் கனவே இல்லை. கட்சியை வளர்ப்பது, தலைவர்களை உருவாக்குவது மட்டுமே என் முதன்மையான பணி. பாஜகவில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க என்னை விட முழு தகுதி இருக்கக் கூடியவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கின்றனர். மற்ற கட்சியில் ஒருவரைத் தவிர வேறு யாரை முதலமைச்சர் வேட்பாளராக சொல்ல முடியும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில், தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி இருக்கும். மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். வாக்குப் பெட்டி எண்ணிக்கையின் போது, அது தான் உண்மை என மக்கள் அறிவார்கள்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தமிழகம் வருகை: ராமேஸ்வரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!