திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளரும் திருப்பூர் மக்களவை உறுப்பினருமான கே. சுப்பராயன் கோவையிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "வரலாற்றிலேயே கேள்விப்படாத அளவிற்கு விவசாயிகள் டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். இந்த போராட்டமானது பாஜகவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கையால் ஏற்பட்டது.
வேளாண் மசோதோ பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கிறதே ஒழிய விவசாயிகளின் நலனுக்காக இல்லை. வேளாண் சட்டங்கள் மூன்றும் உலக வர்த்தக கழகத்தின் நிர்பந்ததத்தால், வந்ததை. இம்மூன்று சட்டங்களும், உண்மையிலே நிறைவேற்றப்படவில்லை. ஏனென்றால் இதனை நிறைவேற்றுவதற்கு பாஜகவுக்கு உரிய பெரும்பான்மை மாநிலங்களவையில் இல்லை. அதை உணர்ந்து, சட்டவிரோதமாக இச்சட்டங்களை அவைத்தலைவர் நிறைவேற்றியிருக்கிறார். இதுதான் போராட்டத்திற்கு பிரதான ஆத்திரமாக இருக்கிறது.
இச்சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். நாடாளுமன்ற ஜனநாயக முறையை அமல்படுத்துவதில் இருந்து இன்றுவரை இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததே இல்லை. ஜந்தர்மந்தரில் இதுவரை போராட்டத்திற்கு தடை என்று அறிவித்ததே இல்லை. ஆனால், இப்போது போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை மோடி அரசு நிராகரித்துவிட்டது. ஜனநாயகம் நன்மை அளிக்காது என்பது ஆர்ஆர்எஸ் அமைப்பின் கொள்கை. அந்த கொள்கையை ஏற்று கொண்டவர் குடியரசுத்தலவைர். தார்மீக அடிப்படையில் குடியரசுத் தலைவரும், பிரதமரும், அந்தப் பதவிக்கு தகுதியற்றவர்கள்.
பாஜக முன்வைத்த காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்ற முழக்கத்தில் பாசிசத்தின் நெடி வீசுகிறது. ஒரே தேர்தல், ஒரே நாடு என்பது விவாதத்திற்கு உரியது அல்ல என பிரதமர் கூறுவது சரியானது அல்ல. நாடாளுமன்றம், மக்களவை ஜனநாயகம் என்று வந்தாலே அனைத்தும் விவாதத்திற்கு உரியது. அர்னாப் கோஷ்சுவாமி வழக்கில் உடனடியாக பிணை வழங்கியிருப்பதை பார்க்கும்போது நீதிமன்றத்திலும் தீய செல்வாக்கு ஊடுருவல் இருப்பது தெரிகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என்டிசி ஆலைகளை உடனடியாக இயக்குவதற்கு மேற்கு மண்டல எம்பிக்களின் சார்பில் ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்துப் பேசவிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குண்டும் குழியுமாக உள்ள திருப்பூர் மாநகரச் சாலைகள்; சீர் செய்யக் கோரும் மக்கள்!