கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் என மொத்தம் 42 கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பாடப்பிரிவுகளில் படிப்பதற்கு நான்காயிரத்து 390 இடங்கள் உள்ளன .
இதில் அரசுக் கல்லூரிகளில் ஆயிரத்து 285 இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 973 இடங்களும் என மூன்றாயிரத்து 258 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு 48 ஆயிரத்து 870 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களது விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் 199.5 கட்ஆப் மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிகாசன் என்ற மாணவர் 199.25 கட்ஆப் மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்கலா 199 கட்ஆப் மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதலிடத்தை மாணவர் ஒருவர் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்புப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.