கோயம்புத்தூர்: விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை துப்பாக்கியால் சுட்டு கட்டுப்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டி கோவை மாவட்ட வேளாண்மை உற்பத்திக்குழுவினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை உற்பத்திக்குழு உறுப்பினர் செந்தில்குமார் கூறுகையில், “கேரள மாநிலத்தில் காட்டு பன்றிகளை துப்பாக்கியால் கட்டுப்படுத்த அனுமதி தரப்பட்டு விட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அதற்கு உத்தரவு, அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து மாநில மற்றும் மத்திய அரசு ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். வனத்துறை அலுவலகத்திலும் வன அலுவலரை சந்தித்து இந்த மனுவை அளிக்கவுள்ளோம்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் ஆகியப் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிகமாக விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. அதனைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: காட்டுப் பன்றிகளை சுட அனுமதி வேண்டும் - பாஜக விவசாயிகள் அணி கோரிக்கை