கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதில் திரையரங்குகள் மூடப்பட்டு காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவருகின்றன.
அதன்படி தற்போது 50 விழுக்காடு இருக்கைகளோடு திரையரங்குகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. கோவையில் இன்று (நவ. 10) இரண்டு திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
புரூக் பீல்டு, புரோஜோன் ஆகிய இரு மால்களில் உள்ள திரையரங்குகள் (12 திரைகள்) மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இரு திரையரங்குகள் அரசு கூறியுள்ள கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றித் திறக்கப்பட்டன.
திரையரங்குகளில் ஆங்காங்கே கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் அனைவரும் ஒரு இருக்கைவிட்டு அமரும்படி செய்யப்பட்டுள்ளன. அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் திரையரங்குகளில் குளிர்சாதன வசதிக்குப் பதில் மின்விசிறி பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் இந்த இரு திரையரங்குகளிலும் முடிந்த வரை ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் புதிய திரைப்படங்கள் ஏதும் இல்லாததால் பழைய திரைப்படங்களே திரையிடப்படுகின்றன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்பார்த்த அளவுக்குப் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. தற்போது புது படம் ஏதும் வெளியாகாததால் பழைய படங்கள், பிற மொழி படங்கள் மட்டும் திரையிடப்பட்டுவருகின்றன.