கோயம்புத்தூர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல நாட்கள் நீதிமன்றம் திறக்கப்படாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நீதிமன்றத்துக்குள் வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
மேலும் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள ரன்பீர் சிங் குழுவைக் கலைக்க வேண்டும் எனவும், நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் நீதிமன்றத்தைத் திறக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.