கோயம்புத்தூர்: கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டடார். இந்நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்வதற்காக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண்-யை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதையடுத்து கோவை வந்த ஏடிஜிபி அருண் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “டிஐஜி விஜயகுமார், அர்ப்பணிப்போடு காவல் துறையில் பணிபுரிந்தவர். அவர் எங்கெல்லாம் பணிபுரிந்தாரோ அங்கெல்லாம் பாராட்டுகளைத் தான் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொள்கையில் முதல் கட்டமாக, கடந்த சில வருடங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அதற்கான சிகிச்சையும் அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட மருத்துவரிடம் நாங்கள் பேசினோம்.
அப்போது விஜயகுமார் நான்கு தினங்களுக்கு முன்பு, அந்த மருத்துவரிடம் பேசி மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது எனக் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் சில மருந்துகளை மாற்றியும் தந்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் அவரை கவுன்சில் செய்துதான் இருந்துள்ளார்கள். இவருக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்த காரணத்தினால் தான், அவரது மனைவி மற்றும் மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் இருந்து இங்கு வந்து அவருடன் சேர்ந்து இருந்து வந்துள்ளனர்.
இப்படிப்பட்ட கட்டத்தில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது. இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இது ஒரு மருத்துவப் பிரச்சனையினால் நிகழ்ந்த சம்பவம். காவல்துறையில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மன உளைச்சல் என்பது வேறு, மன அழுத்தம் என்பது வேறு. மன அழுத்தத்திற்கு கவுன்சிலிங் மற்றும் மருத்துவர் உதவி தேவை, இவர் இந்த இரண்டையும் செய்து தான் வந்துள்ளார்.
அதனையும் மீறி இந்தச் சம்பவம் நடைபெற்று உள்ளது. நான் தற்பொழுது வரை விசாரித்ததில் குடும்பப் பிரச்சனை எதுவும் கிடையாது. அவரது மனைவி மற்றும் குழந்தை அவருக்கு மிகவும் அரவணைப்பாகவும் ஒத்துழைப்பும் நல்கி தான் வந்துள்ளார்கள். அவர் ஒரு நல்ல இடத்தில் இருப்பதால் பணி சுமையும் கிடையாது. காவல்துறை இறுக்கமான பணி என்பதைப் போல் பல்வேறு பணிகள் இறுக்கமாக தான் உள்ளது, மருத்துவர் பணியும் இறுக்கமானது தான்.
இது ஒரு தனி மனிதர் முடிவு என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் இதுவரை தனக்கு ஓய்வு வேண்டும் என்று எதுவும் கேட்டதில்லை. அவர் டீப் டிப்ரஷனுக்கான சிகிச்சையை எடுத்து வந்துள்ளார். அவரை நேற்று கூட மேற்கு மண்டல ஐஜி பார்த்துள்ளார். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அவருடன் பேசி உள்ளார்.
அவர் இரண்டு மூன்று தினங்களாகவே மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதனை அவர்கள் சரி செய்ய முயற்சி செய்து வந்துள்ளனர். அவருடைய மருத்துவருடன் நாங்கள் பேசும்பொழுது அந்த மருத்துவர் விஜயகுமார், ஓசிடி கம் டிப்ரஷனால் பாதிக்கப்பட்டதாக மருத்துவர் கூறுகிறார். அதற்கான மருந்துகளையும் அவர் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது விசாரணை முடிந்து அனைத்தையும் தெரிவிக்கின்றோம்” என தெரிவித்துச் சென்றார்.
இதையும் படிங்க: Vijayakumar IPS: யார் இந்த விஜயகுமார் ஐபிஎஸ்? திறம்பட கையாண்ட வழக்குகள்!