கோயம்புத்தூர்: போளுவாம்பட்டி வனச்சரகம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இங்கு யானைகளின் நடமாட்டம் எப்போதும் காணப்படுகிறது. வனப்பகுதிக்குள் உள்ள யானைகள் உணவு, நீர் தேடி அருகிலுள்ள தொண்டாமுத்தூர், நரசிபுரம், குப்பேபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வருவது வழக்கம்.
தற்போது யானைகளின் வலசை காலம் தொடங்கியுள்ளதால், கேரள வனப்பகுதியிலிருந்து வரும் யானைகள் நரசிபுரம் வைதேகி அருவி பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் உணவிற்காக அருகில் உள்ள தோட்டங்களில் புகுவது வழக்கம். இந்நிலையில் நாள்தோறும் யானைகள் வந்துசெல்லக்கூடிய குப்பேபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் யானைகள் பயிர்களைச் சேதப்படுத்தாமல் இருக்க, தோட்டத்தைச் சுற்றிச் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளனர்.
இதில், சுவரில் நடுப்பகுதியில் கூர்மையான இரும்புக் கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக யானைகள் தோட்டத்திற்குள்ளே நுழைய முற்பட்டாலும், அந்தப் பகுதி வழியாகச் சென்றாலும் கம்பிகள் யானையின் உடல் பகுதியில் குத்தி காயம் ஏற்படுத்தும் சூழல் உள்ளது. இது குறித்து வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கம்பிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:நாய் மீதான பேரன்பின் வெளிப்பாடு: பிஸ்னஸ் கிளாஸ் முழுவதையும் புக் செய்த பெண்!