வால்பாறை, சோலையார் அணை எல்லையில் உள்ள பெரும்பாறை பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காடுகளில் மலைத்தேன் எடுத்து, அதனை விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில் 8 ஆம் தேதி பெரும்பாறை பகுதியை சேர்ந்த தங்கப்பன் உட்பட நான்கு பேர் மலைத்தேன் சேகரிக்க, சோலையார் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது மரத்தில் மேல் ஏறி ஒருவர் தேன் எடுத்து கொண்டிருந்தார். தங்கப்பன் மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த புலி, தங்கப்பனை இழுத்து சென்றுள்ளது. எங்கு தேடியும் கிடைக்காததால், இது குறித்து தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், அடர்ந்த வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தங்கப்பனின் தலை மட்டும் கண்டெடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் இரண்டு மாநில வனத்துறை மற்றும் காவல் துறையினர் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் உடல் கிடைக்கவில்லை.
மேலும், தமிழக வனத்துறையினர் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கேமரா பொருத்தி குழுக்களாக இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா எல்லை வனப்பகுதியில் இரவு நேரத்தில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.