கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொருத்தவரை அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் கரோனா காரணமாக ஊராட்சிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளி நபர்கள் ஊராட்சிகளில் நுழைய தடை, சளி, காய்ச்சல் இருந்தால் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் என பல்வேறு நடவடிக்கைகளை கிராம மக்கள் ஊராட்சி உடன் இணைந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டம் கணியூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் கரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஊராட்சி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும், அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் வேலுசாமி தன்னுடைய ஊராட்சியில் உள்ள 16 கிராம மக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பிற்காக முகக்கவசங்களை வழங்க முடிவு செய்து, நண்பர்கள் உதவியுடன் அதை செயல்படுத்தி வருகிறார்.
16 கிராமங்களில் உள்ள மக்களுக்கு இருபதாயிரம் முகக்கவசங்கள் தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக மூன்று கிராமங்களில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் வேலுசாமி கூறுகையில், என்னுடைய ஊராட்சியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக ஊராட்சியில் உள்ள 16 கிராம மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்க முடிவு செய்து, நண்பர்களை நாடியபோது, முகக் கவசங்கள் தயாரிப்பதற்கான துணிகளை வழங்கினர்.
இதனையடுத்து மற்றொரு நண்பருடைய ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் இந்த முகக்கவசங்கள் இரவு பகலாக தயாரிக்கப்படுகின்றன. ஊராட்சியில் உள்ள தையல் தெரிந்த இளைஞர்கள் தாமாக முன்வந்து முகக்கவசங்களை தயாரித்துக் கொடுக்கின்றனர். ஊராட்சியில் உள்ள மக்களுக்கு கொடுக்க 20 ஆயிரம் முகக்கவசங்களை தயாரிக்க உள்ளோம். முதல்கட்டமாக இந்திராநகர், ஊஞ்சப்பாளையம் பகுதியில் 6 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 14,000 முகக்கவசங்கள் தயாரிக்க வேண்டியுள்ளது என்றார்.
இந்தப் பணியில் கணியூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துமாரியப்பன் என்பவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மாற்றுத்திறனாளியான நான் வெளியே சென்று முகக்கவசங்களை வழங்கி, பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாது. எனவே முகக்கவசங்கள் தயாரிக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு, என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: பிரியாணிக்காக அடம்பிடித்த கரோனா நோயாளி!