கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி காவல் நிலையம் அருகே கொச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கருமத்தம்பட்டியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் காவல் உதவி ஆய்வாளர் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததால் கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.
அதன் பேரில் அங்கு வந்த போலீசார் உதவி ஆய்வாளர் உடையில் ஒருவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது அவர் விருதுநகர் மாவட்டம் மல்லங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பதும், தெக்கலூரில் உள்ள நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும் தெக்கலூர் லட்சுமிநகர் பகுதியில் வசித்து வரும் இவர் காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி ஒரு பெண்ணையும் திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து செல்வத்தைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த அவினாசி சாலை வழியாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருப்பூருக்குப் பயணித்த நிலையில் செல்வம் பாதுகாப்பு அதிகாரியாக அங்கு பணியில் இருந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவையிலிருந்து திருப்பூருக்கு முதலமைச்சர் சாலை வழியாகப் பயணித்த போது நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது போலி போலீஸ் கண்டுபிடிக்கப்பட்டது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராணுவ உடையில் கஞ்சா கடத்தல்.. கேரளா குருவி சிக்கியது எப்படி?