கோவை: கணபதி காமாட்சி அம்மன் கோயில் எதிரே செல்போன் டவர் உள்ளது. நேற்று செல்போன் டவர் மீது ஏறிய நபர் உச்சிக்கு சென்று தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்தனர்.
போலீசார் விசாரித்ததில், நிம்மதி தேடி செல்போன் டவர் மீது ஏறியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். மனைவி வந்துள்ளதாகவும், கீழே இறங்கி வருமாறு தெரிவித்த போதும், தனக்கு நிம்மதி வேண்டும் என கூறி டவரில் இருந்த கம்பியை பிடுங்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மீது டவரில் இருந்த கம்பிகளை பிடுங்கி வீசி, தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின் ஒருவழியாக போலீசார் அந்த நபரை செல்போன் டவரில் இருந்து கீழ் இறக்கினர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தற்கொலை எண்ணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
நிம்மதி தேடி செல்போன் டவரில் ஏறி பொது மக்கள், போலீசார், தீயணைப்பு வீரர்களின் நிம்மதியை கெடுத்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு எதிரொலி: தமிழ்நாடு எல்லையில் சோதனை