கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகேயுள்ள முத்துகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். ஆரோக்கியராஜ் நேற்று (பிப்.09) இரவு அப்பகுதியில் உள்ள கௌரி மெஸ் என்ற உணவகத்திற்கு புரோட்டா பார்சல் வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது, ஆரோக்கியராஜ் புரோட்டாவுக்கு கூடுதலாக குருமா கேட்ட நிலையில், இரண்டு பாக்கெட் குருமா கொடுத்துள்ளனர். ஆனால், ஆரோக்கியராஜ் மேலும் ஒரு பாக்கெட் குருமா தரும்படி கேட்டுள்ளார். இதற்கு அந்த உணவகத்தில் புரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்து வரும் கருப்பசாமி மறுத்திருக்கிறார்.
இதனால், ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ் புரோட்டா மாஸ்டர் கருப்பசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கருப்பசாமி ஆரோக்கியராஜை கீழே தள்ளி விட்டதில் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் ஆரோக்கியசாமியை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, புரோட்டா மாஸ்டர் கருப்பசாமி, உணவக உரிமையாளர் கரிகாலன், முத்து ஆகிய மூவரை அங்கிருந்தவர்கள் பிடித்து சூலூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவல் துறையினர் மூவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புரோட்டா குருமாவிற்காக ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடத்துநரை பஞ்சராக்கிய புரோட்டா மாஸ்டர்!