கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூரில் பார்க் கல்வி குழுமங்களின் பொன் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர் விருது மற்றும் துரோணா விருதுகளை வழங்கினார்.
இவ்விழாவில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் "கையொப்பம்" நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் பார்க் கல்வி குழுமங்களின் முன்னாள் மாணவர்களான சந்திரயான் மூன்று திட்ட அலுவலர்களான ரமேஷ் சுப்பிரமணியன் மற்றும் ஹரிஹரன் ஆகியோருக்கும், முன்னாள் மாணவர்கள் பிக் பாஸ் சீசன் 6 புகழ் நடிகை ஷிவின், திரைப்பட தயாரிப்பாளர் கே.விஜய் பாண்டி உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் கோவை மாநகரில் உள்ள 300க்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள். விருது பெற்ற பின்னர் விழாவில் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, "நாம் சந்திரயான் அனுப்புவதற்கு முன்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல மில்லியன்கள் செலவு செய்து நூற்றுக்கணக்கான விண்கலன்களை அனுப்பி இருந்தாலும் கூட 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் அனுப்பியது நூற்றில் ஒன்றாக இல்லாமல் உள்ளது.
நமது பிரக்யான் பத்திரமாக தூங்கிக் கொண்டிருக்கிறது. அந்த தூக்கத்தை எழுப்பி திரும்பவும் கொண்டு வர முடியுமா என எல்லோரையும் போல நானும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து விழாவில் பேசிய விழாவில் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், "கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு. முறையான கல்வி பெறாத நான் மக்களின் மனங்களில் இடம் பெற காரணம் ஆசிரியர்கள். எனது நண்பரும் ஆசிரியர்களில் ஒருவரான புவியரசுக்கும் விருது கிடைப்பதில் மகிழ்ச்சி, அவர் மய்யம் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர்.
கலாமிற்கு பிறகு ஆயிரகணக்கான இளைஞர்களை ஈர்த்தவர் மயில்சாமி அண்ணாதுரை, தமிழ்வழியில் பயின்று நிலவை ஆள்கின்றார். அப்போதைய ஆசிரியர்களிடம் சுதந்திரம், தேசியம், திராவிடம், தமிழ்தேசியம் என பல கருத்துகள் இருந்தது. அதனால் அரசியல் புரிதல் மாணவர்களுக்கு இருந்தது.
ஆனால் இப்போது அரசியல் சுரணையற்ற ஒரு தலைமுறையை உருவாகிவிட்டது. காரணம் தேர்தல் நாளை விடுமுறையாக கருதி சுற்றுலா செல்லும் நபர்களாக இருக்கின்றோம். இன்று நாம் சுதந்திரமாக பேசிக்கொண்டு இருப்பதற்கு நம் முன்னோர்கள் தான் காரணம், இந்த உரிமைகள் காப்பாற்ப்பட வேண்டும்.
2024 நாடாளுமன்ற தேர்தல் வர போகின்றது. முதன் முதலில் வாக்களிக்க உள்ள மாணவர்கள் உங்களை ஆளும் தகுதி அவருக்கு உண்டா என்பதை பார்த்து வாக்களிக்க வேண்டும். அரசியல் உங்கள் கடமைகளில் ஒன்று. அதை பிறகு பார்த்து கொள்ளலாம் என இருப்பது மிகப்பெரிய தவறு. என்னுடைய 22 வது வயதில் எனக்கு கலைஞர் தந்தி அனுப்பினார்.
அதில் நீங்கள் ஏன் திமுகவில் இணைய கூடாது என கேட்டார்கள். ஆனால் நான் எந்த பதிலும் சொல்லாமல் இருந்து விட்டேன். ஆனால் 60 வயதில் என் கலை என்னை காப்பாற்றவில்லை, ஜனநாயகம் தான் காப்பாற்றியது. அரசியலுக்கு கொஞ்சம் முன்பே வந்து இருந்தால் இன்னும் பல மாற்றங்களை செய்து இருக்க முடியும்.
பல கால தாமதத்திற்கு பின்பு 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. அதை 2029 வரை அமல்படுத்தாமல் இருப்பது என்பது ஒத்துக்கொள்ள முடியாது" என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "இதுல ஒரிஜினல் பீசே வருது" சந்திரமுகி 2 ரகசியம் உடைத்த ராகவா லாரன்ஸ்!