கோயம்புத்தூர்: பீளமேடு பகுதியிலுள்ள நேஷனல் மாடல் பள்ளியில் இன்று (நவ.19) TNPSC Group-1 தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தில் 45 அறைகளில் 900 தேர்வர்கள் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஐஸ்வர்யா குரூப்-1 தேர்வு எழுத வந்துள்ளார். அப்போது கூகுள் மேப்பில் நேஷனல் மாடல் பள்ளி அவிநாசி சாலை எனக் காட்டியுள்ளது.
இதனையடுத்து அங்கு சென்றவர் பள்ளி அங்கு இல்லை என்பதையடுத்து பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார். கடைசியாக நேஷனல் மாடல் பள்ளிக்கு வந்தபோது ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததால், தேர்வு எழுத அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே விட மறுத்துள்ளனர்.
இது குறித்து ஐஸ்வர்யா கூறும் போது, “2019 ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வுக்காக நான் தயாராக இருந்தேன். பள்ளி நிர்வாகம், கூகுள் மேப்பை அப்டேட் செய்யப்படாததால், எனது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது” என்று வேதனையுடன் கூறினார்.
இதே போல இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுதாமல் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது. மற்ற மையங்களில் தேர்வு எழுத வந்தவர்கள், 9.30 மணி அனுமதிக்கப்பட்ட நிலையில், தாங்கள் அனுமதிக்கப்படாதது வருத்தமளிப்பதாகவும், அரசு எங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே கூகுள் மேப் தவறாக வழிகாட்டியதா? அல்லது அதனை சரியாக பயன்படுத்தவில்லையா எனவும் கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: யானை தாக்கியதில் பாகன் காயம்... மருத்துவமனையில் அனுமதி