கோயம்புத்தூர் (பொள்ளாச்சி): 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி 210 டியூப் லைட்டுகளை தன் தொடையில் உடைத்து நோபல் உலக சாதனை புத்தக்கத்தில் இடம் பிடித்து உள்ளார்.
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வசித்து வருபவர் கௌரி சங்கர் ரம்யா தம்பதியினர். இவர்களது மகள் ஆதன்யா (12) பல்லடம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். 4 வயது முதல் கராத்தேவில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும், கராத்தேவில் உலக சாதனை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இவர், இதற்கான பயிற்சிகளைப் பல வருடங்களாக எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நோபல் உலக சாதனைக்காக தனது உடலில் 210 டியூப் லைட்டுகளை 2 நிமிடங்களில் இடைவிடாமல் அடித்து உடைக்க திட்டமிட்டார். நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் அவரது கால் தொடைப் பகுதியில் டியூப் லைட்டுகளை அவரது பயிற்சியாளர்கள் இடைவிடாது உடைத்தனர்.
இதையும் படிங்க: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது! போலீசார் கொடுத்த தகவல் என்ன?
1 நிமிடம் 24 வினாடிகளிலேயே 210 டியூப் லைட்டுகளை பயிற்சியாளர்கள் மாணவியின் கால் தொடைப் பகுதியில் உடைத்து சாதனையை நிகழ்த்தினர். இதைக் கண்ட அங்கிருந்த பெற்றோர்கள், மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சாதனை நிகழ்த்திய மாணவியை ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர். நிகழ்ச்சிக்குப் பின்னர் மாணவி ஆதன்யாவிற்கு நோபல் உலக சாதனை நிறுவனத்தின் அலுவலர்கள் சான்றிதழ் வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாணவி கூறுகையில், "எல்கேஜி வகுப்பில் இருந்தே கராத்தே கற்று வருவதாகவும் கராத்தேவில் சாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டதால் இன்று சாதிக்க முடிந்தது" என்று தெரிவித்தார். 8ஆம் வகுப்பு மாணவி 200க்கும் மேற்பட்ட டியூப் லைட்டுகளை தன் உடம்பில் உடைத்து சாதனை புரிந்தது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன் மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Vijay Antony Daughter: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் திடீர் மரணம்!