கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகே ருக்மணி நகரைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் வீனாகுமாரி (60). வெளிநாட்டில் வசித்து வந்தாலும் தனது பூர்வீக ஊரான கோவையில் வீடு கட்ட வேண்டும் என்பது இவரது ஆசை. இந்த நிலையில் இவருக்குச் சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முற்பட்டபோது 60 வயதான அரச மரம் ஒன்றை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால், அந்த மரத்தை வெட்டி வீசுவதற்கு வீனாகுமாரிக்கு மனம் இல்லை. எனவே, ஓசை என்னும் சுற்றுச்சூழல் அமைப்பை நாடி தங்கள் இடத்தில் இருந்த பழமையான அரச மரம், வேம்பு மரம் இரண்டையும் வேரோடு அகற்றி மக்களுக்கு பயனுள்ள பொது இடங்களிலோ அல்லது கோயில் அருகாமையிலோ நடவுசெய்ய கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மரத்தை உயிருடன் அகற்ற ஓசை அமைப்பு முயற்சி மேற்கொண்டது. வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரின் ஒத்துழைப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மரத்தை வேரோடு அகற்றினர். சுமார் எட்டு மணி நேரம் நடந்த இந்த பணி நிறைவுற்று லாரியின் மூலமாக ஏற்றப்பட்டு காளப்பட்டி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்பு அங்குள்ள கோயில் அருகே நடவு செய்யப்பட்டது.
அரச மரம் உயிர் காற்றை கொடுக்கும் மரமாக உள்ளது. இது போன்ற மரங்கள் வெட்டப்படாமல் இருக்க ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற இயற்கை ஆர்வலர்களை நாட வேண்டும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. 'மரங்களுக்கு மறுவாழ்வு' என்ற திட்டத்தின் கீழ் ஓசை இதுபோன்ற பணிகளை மேற்கொண்டுவருவதாகவும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு செய்ததாகவும் அந்த அமைப்பைச் சார்ந்த சையாது என்பவர் தெரிவித்தார்.