கேரளாவை பூர்வீகமாக கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனம் ஐசிஎல் ஃபின்கார்ப். இந்நிதிநிறுவனம் நகை அடகு மூலம் வட்டிக்கு பணமும் கொடுத்து வருகிறது. இந்நிதிநிறுவனத்திற்கு கோயம்புத்தூர் குனியமுத்தூரில் கிளை உள்ளது. இக்கிளையின் தலைவராக கார்திகா, மேனேஜராக சரவணகுமார் மற்றும் நிதி நிறுவன கிளையின் துணை தலைவராக சத்யா பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நிறுவனத்தின் வருடாந்திர தணிக்கை நிதி குழுவினர் நகைகளை மதீப்பீடு செய்யும் போது லாக்கரில் போலி நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்நிறுவனத்தில் பணியாற்றியவர்களிடம் விசாரணை நடத்திய போது, குனியமுத்தூர் கிளையின் தலைவர் கார்திகா, மேனேஜர் சரவணகுமார், துணை தலைவர் சத்யா மூவரும் சேர்ந்து வரவு செலவு வைத்திருக்கின்ற வாடிக்கையாளர்கள் மற்றும் உறவினர்கள் 10க்கும் மேற்ப்பட்டோரின் ஆவணங்களை பயன்படுத்தி போலி கையொப்பமிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

போலி நகைகளை வைத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் தந்தது போல கணக்கு காட்டி 26 லட்சம் ரூபாயை திருடியுள்ளனர். மேலும், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை எடுத்து விட்டு அதற்கு பதிலாக போலி நகைகளை லாக்கரின் அடகு நகையாக கணக்குகாட்டி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சத்யாவை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவான கார்திகா மற்றும் சரவணகுமாரை தேடி வருகின்றனர்.
