போதைப் பொருள்கள் விற்கும் ஆசாமிகள், பெரும்பாலும் கை மேல் காசு தரும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்தே விற்பனை செய்வார்கள். மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி, அவர்களிடம் அதிகளவில் பணத்தைச் சுரண்டும் வளம் கொழிக்கும் தொழிலாக தற்போது இது மாறிவருகிறது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே இந்தக் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டு வந்தாலும், குறிப்பாக கோவையில் மட்டும் இந்த மாதத்துக்குள் ஏழு போதைப் பொருள் விற்பனையாளர்களைக் கைதுசெய்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கோவையிலுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் எல்.எஸ்.டி. எனப்படும் போதை மருந்து தடவிய வில்லைகளை விற்பனை செய்த மூன்று நபர்களைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். கோவை வெள்ளக்கிணறு பிரிவு - மேட்டுப்பாளையம் சாலையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய போதை வில்லைகளை வைத்திருந்த தபரிஷ், பிரதீப்ராஜ், விவியன் ஆகிய மூன்று பேரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து எல்.எஸ்.டி. போதை மருந்து, 0.640 மில்லி கிராம் எடையுள்ள 34 1.2 கிலோ கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள்களை யாரிடமிருந்து வாங்கி விற்பனை செய்கிறார்கள் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் எனவும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக போதைப் பொருள்கள் விற்ற நான்கு பேரை, இம்மாதம் போதைத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைதுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது