சென்னை: சென்னையைச் சேர்ந்த விகாஷ் என்பவர் சொமெட்டோ மூலம் உணவகத்தில் காம்போவாக நேற்று (அக்.18) உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முழுமையாக உணவு டெலிவரி ஆகாததால் சொமெட்டோ கேர் எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது, சொமெட்டோ தரப்பில், "உங்கள் புகார் குறித்து உணவகத்தைத் தொடர்புகொண்டோம், ஆனால் மொழி தெரியாததால் உங்களது பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை எனக் கூறியும் இந்தி நமது தேசிய மொழி. அதனால், ஒவ்வொருவருக்கும் ஓரளவாவது கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![செமெட்டோ பங்குகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13395642_2.jpg)
தேசிய அளவில் ட்ரெண்டான ஹேஷ்டேக்
இந்த உரையாடல் பதிவை வாடிக்கையாளர் விகாஷ் ட்விட்டரில் பகிர, #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி, பலரும் கண்டனம் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, செந்தில்குமார் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து இன்று (அக்.19) சொமெட்டோ நிறுவனம், வாடிக்கையாளரிடம் வருத்தம் தெரிவித்து தமிழில் அறிக்கை வெளியிட்டது.
![செமெட்டோ பங்குகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13395642_3.jpg)
#Reject_Zomato என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகியது. பலரும் தாங்கள் பதிவிறக்கம் செய்திருந்த சொமெட்டோ செயலியை செல்போனிலிருந்து நீக்குவதாக (Uninstall) செய்வதாக தெரிவித்திருந்தனர். சொமெட்டோவின் நிறுவனத்தின் இந்தச் சர்ச்சையால் பங்குச்சந்தையில் சொமெட்டோவின் பங்கு இறக்கம் கண்டது. பின் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கோரி அறிக்கை அளித்த பின் சொமெட்டோவின் பங்குகள் சற்று ஏற்றம் கண்டது.
மேலும் வாடிக்கையாளர் புகாரில் தெரிவித்தபடி உணவிற்கான பணத்தையும் திரும்ப செலுத்துவதாக சொமெட்டோ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Exclusive சொமேட்டோ சர்ச்சை - பாதிக்கப்பட்டவரின் வீடியோ பதிவு