சென்னை : காவல் ஆணையர் அலுவலகம் முன்பு இன்று காலை Zomato டிசர்ட் அணிந்து வந்த ஒருவர் திடீரென 3ஆவது நுழைவுவாயில் முன் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சிடைந்த பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் ஓடி சென்று அந்த நபரை தடுத்து மீட்டனர். உடலில் தண்ணீரை ஊற்றினர்.
பிறகு நடத்திய விசாரணையில் அவரது பெயர் விக்னேஷ் என்பதும், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. Zomato-ல் பணியாற்றி வருவதும் தெரிந்தது. இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் மனைவியின் உறவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருவதால் தன்னை மிரட்டுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வேப்பேரி காவல்துறையினர் அங்கு வந்து விக்னேஷை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அங்கு முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவரது குடும்பத்தினரை வரவழைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலத்தில் நீதிபதிக்கு கத்திக்குத்து - உதவியாளர் கைது