தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இந்தத் தடை உத்தரவை பயன்படுத்தி பலர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் சென்னை கோயம்பேடு பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் இருந்து, தொடர்ந்து பெட்ரோல் திருடு போவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், இரு சக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள் இருவர், அந்தப் பகுதி முழுவதும் நோட்டமிட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோலைத் திருடும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. மேலும் பெட்ரோல் திருடும் இந்த கும்பல் எப்போது வேண்டுமானாலும் வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்துச் செல்லும் சம்பவம் நிகழக் கூடும் என பொதுமக்களிடையே ஒருவித அச்சம் எழுந்துள்ளது.
எனவே, இரவு நேரங்களில் காவல் துறையினர் இப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி - குற்றவாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு!