சென்னை : அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டையில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் பொறியியல் பட்டதாரி வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மது அருந்தி விட்டு, பிரியாணி பார்சல் வாங்க சென்ற இடத்தில் தெரியாமல் எதிர் தரப்பு தோள்பட்டை மீது மோதியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெட்டி கொலைச் செயப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை கொரட்டூர் ரெட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் - கலை தம்பதி. இவர்களுடைய மகன் பாலசந்தர் (வயது 23), பொறியியல் படிப்பை முடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறை நாளை முன்னிட்டு விளையாட சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட அமரும் போது அவரது நண்பர்கள் இருவர் வீட்டிற்கு வந்து அழைத்துள்ளனர்.
வீட்டில் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற பாலசந்தர், அவரது நண்பர் முகேஷ் உள்ளிட்ட மூவரும் மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடையில் சட்டவிரோதமாக இயங்கும் பாரில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அருகே உள்ள பிரியாணி கடையில் பாலசந்தர் மற்றும் நண்பர்கள் சென்று பார்சல் வாங்க சென்றுள்ளனர்.
அங்கு ஏற்கனவே பார்சலுக்காக காத்திருந்தவரின் மீது பாலசந்தர் தெரியாமல் இடித்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. கையில் வைத்து இருந்த ஹெல்மெட்டால் பாலசந்தர் தாக்கியதாகவும், அப்பொழுது அந்த கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் முகேஷின் முதுகில் வெட்டுகாயம் ஏற்படவே முகேஷ் மற்றும் உடன் வந்தவர் தப்பி ஓடியுள்ளனர். பாலசந்தர் மட்டும் தனியாக மாட்டிக்கொள்ள அந்த நபர் தலையிலே கத்தியால் வெட்டவே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்நு ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசந்தர் உயிர் இழந்து உள்ளார்.
இது தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையில் தொடர்புடைய நெப்போலியன், அஜீத், சங்கர்பாய், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர். இதில் நெப்போலியன் ஐசிஎப் காவல்நிலைய சரித்தரப்பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் நெப்போலியன் நண்பர்களோடு அருகே இருந்த மதுபான கடையில் மது அருந்தி விட்டு, பிரியாணி கடையில் பிரியாணி பார்சல் வாங்க காத்திருந்ததாகவும், அப்பொழுது உள்ளே வந்தவர்கள் தன்மீது இடித்தது மட்டுமில்லாமல், நாங்கள் யார் என்பது தெரியாமல் ஹெல்மெட்டால் தாக்கியதாகவும், அதனால் நெப்போலியன் ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
கொலை செய்தவர்கள் அத்திப்பட்டு ஐசிஎப் காலனி மற்றும் அயனாவரம் பகுதியில் வசித்து வருவதும், இதில் சங்கர்பாய், மற்றும் நெப்போலியன் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது. எப்பொழுதும் தற்காப்புக்காக கத்தி வைத்து இருந்ததாகவும், அதை வைத்தே கொலை செய்ததும் விசாரனையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பாலசந்தர் உடல் கீழ்பாக்கத்தில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் இறப்பை தாங்காமல் அவரது தாய் கதறி அழுதார். நண்பர்கள் அழைத்ததால் வெளியே செல்வதாக சென்ற மகனை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது என்றும், பொறியியல் படித்து விட்டு நல்ல வேலைக்கு செல்ல ஆசைப்பட்ட பையன் தற்போது கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவரது தந்தை வேதனையோடு தெரிவித்தார்.
பாலசந்திரனை வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் பாலசந்தர் தலையில் வெட்டி நிலைக்குலைந்து விழுவதும், நண்பர்கள் தெரித்து ஓடவும், கீழே விழுந்தவனை ரவுடி நெப்போலியன் கொடூரமாக வெட்டும்போது அருகே ஒரு டிரை சைக்களில் ஒருவர் அதனை கண்டுகொள்ளமால் பொருட்களை இறக்கி வைத்து விட்டு செல்வதும், ரவுடி நெப்போலியன் நடுசாலையில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை வாங்காடா வாங்க என கத்தியப்படி மிரட்டுவது போன்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : "செல்லும் இடமெல்லாம் கேப்டனின் உடல் நலம் குறித்து கேள்வி" - பிரேமலதா விஜயகாந்த்!