சென்னை: சென்னை திருவொற்றியூர் ஏக வள்ளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ் (26). இவர் தி.நகரில் உள்ள கோச்சிங் சென்டர் ஒன்றில், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜன.14) வழக்கம் போல் கோச்சிங் சென்டருக்கு செல்வதற்காக திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகில் வந்துள்ளார்.
அப்போது ரயில் தண்டவாளத்தின் குறுக்கே சரக்கு ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. அதை கடக்க சரக்கு ரயிலின் மீது ஏறும் பொழுது, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உடலில் தீ பற்றிய நிலையில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திருவொற்றியூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, இளைஞரின் உடலைக் கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நீட் தேர்வுக்கு படிக்கச் செல்லும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் வீட்டில் தூங்கிய குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு!