சென்னை அண்ணாசாலை தாராபுரம் டவர் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா, “பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மோடி அரசு பதவி விலக வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தவறிய மாநில அரசு பதவி விலக வேண்டும். இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக பொய்யான வாக்குறுதி கொடுத்த பிரதமர் மோடி தற்போது வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறி விட்டார். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இதனால் குடும்பப் பெண்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சாதாரண குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர். தங்களின் சுயநலத்திற்காக மோடி அரசுடன் கைகோர்த்து உள்ள மாநில அரசு அவர்களுக்கு தரும் ஆதரவை விலக்கி கொள்ள வேண்டும். பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிக்கு தகுந்த பாடத்தை வருகின்ற தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:
நெருங்கும் தேர்தல்: இரு இணை தலைமைத் தேர்தல் அலுவலர்கள் நியமனம்!