சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் (செப்.20) ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை, இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அச்சம்பவம் குறித்த சிசிவிடி காட்சிகள் வெளியாகி உள்ளன.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி வண்டலூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அப்பெண் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு கிளம்பி சென்றுள்ளார்.
பின் கல்லூரி மாணவி மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது, அந்த பெண்ணை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வசந்த் (வயது 19) என்பவர் மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் தனது காதலை ஏற்க மறுத்த அந்த பெண்ணின் முகம், கை, தலை, கால் போன்ற பகுதிகளில் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனிடையே அப்பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
பின்னர் அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிக்கரணை போலீசார் வெட்டு காயத்துடன் இரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த சம்பம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த வசந்த் என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். கல்லூரிக்கு சென்ற மாணவியை பின் தொடர்ந்து வந்த வசந்த், அவரது ஒருதலைக் காதலை ஏற்குமாறு வற்புறுத்தியதாகவும், அதைத் கல்லூரி மாணவி ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த வசந்த், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார், நேற்று (செப். 21) மாலை வசந்தை நீலாங்கரை அருகே பிடிக்க முற்பட்டபோது, அவர் தனது கையில் வைத்து இருந்த பையை கொண்டு காவலர்களை தாக்கி தள்ளிவிட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் தப்பி ஓடியவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பையில், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததாகவும் நீலாங்கரை பகுயியில் பதுங்கி இருப்பது குறித்து கிடைத்த ரகசிய தகவலை கொண்டு வசந்தை சுற்றிவளைத்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் மாணவி தாக்கப்படுவதற்கு முன்னர், சாலையில் இளைஞரால் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.