பப்-களுக்கு வரும் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை - இளைஞர் கைது! - பப்
ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் உள்ள பப்-களுக்கு வரும் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்துவந்த இளைஞரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 150 அட்டைகள் அடங்கிய 1500 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.
சென்னை: அடையாறு திரு.வி.க பாலம் அருகே அபிராமபுரம் போலீசார் நேற்றிரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
போலீசார் கேட்ட கேள்விகளுக்கு, வாகனத்தில் வந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அதிகரிக்க, இளைஞரிடம் இருந்த பையைப் பறித்து சோதனை செய்தனர். அதில், 150 அட்டைகள் அடங்கிய 1500 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
பின்னர் போதை மாத்திரைகள் குறித்து கேட்டபோது இளைஞர் சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருப்பதாக மழுப்பியுள்ளார். இதையடுத்து இளைஞரை அபிராமபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்ற கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிடிபட்ட இளைஞர் ஆழ்வார்பேட்டை பீமன்னா கார்டன் பகுதியைச்சேர்ந்த கோகுல் (எ) மதன் என்பதும், ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் உள்ள பப்-களுக்கு வரும் இளைஞர்களுக்குத் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும், அவர் மீது ஏற்கெனவே 3 போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மதனை கைது செய்த போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா வேட்டை 3.0: விழுப்புரத்தில் 2 பேர் கைது