சென்னை திருமுல்லைவாயில் அடுத்த அன்னனூர் பகுதியில் பசுமாடு வைத்து வியாபாரம் நடத்திவருபவர் கோபி. இவருடைய மனைவி சுதா. இந்த தம்பதியினர் நான்கு மாடுகளை வளர்த்துவருவதுடன், அதனை வைத்து பால் கறந்தும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதே பகுதியில் சாலையில் பேக்கரி கடை நடத்தி வருபவர் துதிப் (21). இவர் கடையின் அருகில், பசு மாடு ஒன்று மழைக்கு ஒதுங்கியுள்ளது.
இந்த காரணத்தால் கடையில் இருந்த பட்டா கத்தியை எடுத்து, பசுவின் பின் பக்கம், வால் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து காயத்தால் துடித்த பசு உருகலைந்து அங்கே விழுந்துள்ளது.
இதனிடையே, பசுவின் உரிமையாளர் பசுவை காணவில்லை என பல இடங்களில் தேடியுள்ளார். இதனைத்தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து பசு தட்டு தடுமாறி வீட்டுக்கு வந்துள்ளது.
பசுவுக்கு தண்ணீர் வைக்கும்போது கோபி அதன் பின் பக்கம் 7 இடங்களில் கத்திக்குத்து காயம் விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுதொடர்பாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த துதிப்தான் பசுவை காயப்படுத்தியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே மூன்று முறை பசுவை இதே போல் தாக்கியிருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து துதிப்பை கைது செய்த போலீஸார், அவர் மீது வாயில்லா ஜீவனை துன்புறுத்தல், ஆயுதம் வைத்து தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.