சென்னை: பெசன்ட்நகரில் இருந்து தாம்பரம் நோக்கி மாநகர பேருந்து (21G) இன்று (மார்ச் 24) சென்று கொண்டிருந்தது. அப்போது, மத்திய கைலாஷ் பேருந்து நிறுத்தத்தில், பேருந்து நின்ற போது, இளைஞர் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் அந்த இளைஞர், நடத்துனர் சிவக்குமாரிடம் மைலாப்பூர் செல்ல பயணச்சீட்டு கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர், பேருந்து மைலாப்பூர் செல்லாது என்றும், தாம்பரம் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், நடத்துனர் சிவகுமாரை தாக்கிவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி, பேருந்து கண்ணாடி மீது கற்களை வீசியுள்ளார்.இதனையடுத்து அவரை பிடித்த பயணிகள், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நடத்துனர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில், இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் செம்மஞ்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ராமராஜன்(31) என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை!