சென்னை ஆவடி, கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பபின் (29). இவர் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பிராஜெக்ட் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.
கடந்த 14ஆம் தேதி மாலை ஆவடி, சிந்து நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபடியே செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென இறங்கிவந்து பபினின் செல்போனை பறித்துள்ளார்.
இதையடுத்து பபின் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அதற்குள் அந்த நபர் செல்போனுடன் தயாராக நின்ற வாகனத்தில் தப்பித்துச் சென்றார். இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் பபின் புகார் அளித்தார்.
இதன் பின்னர் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வழிப்பறியில் ஈடுபட்ட இருவரின் உருவமும் தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் திருநின்றவூர், பவானி நகர், திலகர் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (19), ரிஷி (20) என்பது தெரியவந்தது.
பின்னர் காவல்துறையினர் இளைஞர்களை நேற்று (அக். 18) சுற்றி வளைத்து பிடித்தனர். இருவரிடமும் விசாரித்ததில் அவர்கள் ஆவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் செல்போன்களை பறித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த மூன்று செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின்பேரில் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க... ஒரே இரவில் 7 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் கைது!