சென்னை கோட்டூர்புரம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், காவலர்களான சுப்பையா, பிரசாந்த் ஆகியோர் நேற்று (அக்.,21) விடியற்காலையில் திருவிக பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அப்பாலத்தின் மேல் இருசக்கர வாகனம் ஒன்று தனியாக நின்றுள்ளது. இதைக் கண்டு சந்தேகமடைந்து காவல் துறையினர் பாலத்தின் கீழுள்ள கூவம் ஆற்றை பார்த்தபோது ஒரு நபர் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்தார்.
உடனடியாக காவலர்கள் கயிற்றினை கொண்டு சென்று ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த நபரை உயிருடன் மீட்டு முதலுதவி அளித்ததுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர். இதில், தற்கொலைக்கு முயன்றது கோட்டூர்புரம் வரதபுரம் பகுதியை சேர்ந்த விஷ்னு வர்மன் (25) என்பது தெரியவந்தது. விஷ்னு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் தந்தை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!