சென்னை ராயப்பேட்டையில் உள்ள ’எக்ஸ்பிரஸ் அவென்யூ’ வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணியிடம் நிர்வாகம் கூறியது.
அதற்கு அவர் அருண் குமார்,ரஞ்சித் குமார்,யுவராஜ்,அஜித் குமார்,ஸ்ரீநாத் ஆகிய ஐந்து பேரை சுத்தம் செய்ய அங்கு அனுப்பியுள்ளார். அப்போது, ரஞ்சித் குமார் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார்.
உடனடியாக அவருடய அண்ணன் அருண் குமார் கழிவு நீர் தொட்டியின் கீழே இறங்கி மயக்கமடைந்த தம்பியை மீட்டார். பிறகு ரஞ்சித்தை காப்பாற்றச் சென்ற அருண்குமாரும் விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, அண்ணா சாலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அருண்குமாரின் உடலை உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மயக்கமடைந்த ரஞ்சித்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும், இந்நிகழ்வு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அண்ணா சாலை காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யவைத்த வணிகவளாக அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பியை காப்பாற்றச் சென்ற அண்ணன் உயிரை பறிகொடுத்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : விஷ வாயு தாக்கி வட இந்திய இளைஞர்கள் பலி...!