சென்னை: ஜாம்பஜார் தானப்பா தெருவில் உள்ள முகமது ஜாஹிர் என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் கழிவு நீர் இணைப்புக்கான கட்டுமான வேலை நடந்துள்ளது. இரவு நேரத்தில் வேலை நடைபெற்றதால் வெளிச்சத்திற்காக கட்டிடத்தில் இருந்து வையர் மூலம் மின்சாரம் எடுத்து வாசல் பகுதியில் உள்ள இரும்பு கதவு வழியாக டியூப் லைட் ஒன்றிற்கு இணைப்பு கொடுத்துள்ளனர்.
முனியன், சேகர், முருகன் ஆகிய மூன்று பேர் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது முருகன் என்பவர் நிலை தடுமாறி இரும்பு கதவை தொடும்போது விபத்து ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் முருகனை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முருகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜாம்பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த முருகன் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து அஜாக்கிரதையால் நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வாறு இருப்பின் அதற்கேற்றார் போல் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: CCTV: பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி; பைக்கில் மோதி தூக்கிவீசப்பட்ட அவலம்!