சென்னை: ஆவடி வசந்தம் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரன் (30). இவர் சென்னை கந்தன்சாவடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜனனி (25) தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 9 மாத குழந்தை உள்ளது.
இந்நிலையில் கோடை விடுமுறைக்காக நரேந்திரனின் தாய் ஒரு வாரமாக அவரது வீட்டில் இருந்துள்ளார். நேற்று காலை தனது தாயை அழைத்துக் கொண்டு அரக்கோணம் சென்ற நரேந்திரன் மாலை 4 மணியளவில் அரக்கோணத்தில் இருந்து ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விவேகானந்தன் நகர் அருகே சென்ற போது, அதிக வேகம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்புச் சுவரில் மோதிக் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயத்துடன் காரில் சிக்கியிருந்த நரேந்திரனை உடனடியாக மீட்டு அப்பகுதி மக்கள் ஆவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையின் தடுப்பு சுவற்றின் மீது மோதி நின்ற காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.
சொந்த ஊருக்குச் சென்று தனது தாயை வீட்டில் விட்டுத் திரும்பி வரும் வழியில் இளம் பொறியாளர் விபத்தில் சிக்கிப் பலியான சம்பவம் ஆவடியில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் நிகழ்வு - மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்திய நடிகர்கள்!