சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அலுவலர் ரகோத்தமன் (72) கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இதையறிந்த எழுத்தாளர் பா. ராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'ரகோத்தமன் காலமான செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது ராஜிவ் கொலை வழக்கு - புலன் விசாரணைக் குறிப்புகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தது நான் தான். சுமார் ஆறு மாத காலம் சென்னை கே.கே. நகரில் இருந்த அவர் வீட்டுக்கு வாரம் இருமுறை சென்றுகொண்டிருந்தேன். ஏராளமான துறை சார்ந்த கோப்புகள், தானே எழுதிய குறிப்புகள், ஆடியோ கேசட் ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டு பேசுவார்.
எங்காவது இடைமறித்துக் கேள்வி கேட்டால் கணப் பொழுதில் ஆதாரத்தை எடுத்துக் காட்டுவார். நான் எதையெல்லாம் சந்தேகப்பட்டுக் கேட்கிறேனோ, அதைத் தனியே எழுதி வைத்துக்கொண்டு அதற்குத் தனியே ஒரு நாள் வரச் சொல்லி விரிவான விளக்கம் சொல்வார்.
அந்த வழக்கில் துலக்கம் பெற்ற பகுதிகளுக்கு ரகோத்தமன் மிக முக்கியமான காரண கர்த்தாவாக இருந்தார். அதைத் தாண்டி, பல இருள் மூலைகளும் அதில் இருந்தன. ரகோத்தமன் சிரித்துக்கொண்டே சொல்வார், 'விளக்கு இருக்கிறது. கொளுத்தி வைத்திருக்கிறேன். ஆனால் போடவிட்டால்தானே?' இறுதி வரை அவருக்கு அந்த வருத்தம் இருந்திருக்கும். மகத்தான மனிதர். மிக நேர்மையான அலுவலர்' என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் உயிரிழப்பு!