சென்னை: நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு 'மீ டூ' ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் பதிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக இயக்குநர் சுசிகணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.
இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அந்த அவதூறு வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், விசாரணை நடைமுறையில் தவறு நடக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ள லீனா மணிமேகலை விசாரணை நடத்தி வரும் மாஜிஸ்ட்ரேட் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. எனவே வழக்கை வேறு மாஜிஸ்ட்ரேட்க்கு மாற்றி உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி. சந்திரசேகரன் முன்பு இன்று (ஏப்ரல் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது லீனா மணிமேலை தரப்பில் வழக்கறிஞர் அபுடுகுமார் ஆஜராகி, முகநூல் பதிவுகளை ஆதாரமாக எடுத்துக்கொண்ட மாஜிஸ்திரேட் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கில் தொடர்புடைய நான்கு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய தங்களுக்கு அனுமதி மறுத்தும் புதிய நடைமுறையை கையாண்டுள்ளதாக வாதிட்டார்.
சாட்சியங்களின் வாக்குமூலங்களை சாட்சி கூண்டில் ஏற்றி பெறாமல் மனுவாக ஏற்றுக்கொண்டது தவறு என்றும் சுட்டிக்காட்டினார்.நியாயமான முறையில் நடைபெறாத வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், வழக்கை வேறு மாஜிஸ்திரேட்டிடம், விசாரணைக்குப் பட்டியலிட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இதையடுத்து அவதூறு வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பும்படி சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கும், லீனா மணிமேகலையின் வழக்கு குறித்து சுசி கணேசன் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்.27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: போலி சாதி சான்றிதழ்: ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலை முடக்கம்