தமிழ்நாட்டில் ’பதிப்புலக ஆளுமை’ எனப் போற்றப்படுபவர் க்ரியா ராமகிருஷ்ணன். கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 16 நாள்களாக சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று (நவ.17) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் அவர் சிகிச்சைப்பெற்று வந்தபோதே ' க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ என்னும் தனது நூலின் மூன்றாவது பதிப்பை கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியிட்டார். இதே நூலின் முதல் பதிப்பை 1992ஆம் ஆண்டிலும், இரண்டாவது பதிப்பை 2008ஆம் ஆண்டிலும் வெளியிட்டுள்ளார்.
இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ்ச் சொற்களில் ஏற்படும் மாற்றங்களை உள்ளடக்கி ஒரு அகராதியை மூன்று பதிப்புகளாக வெளியிட்ட ஒரே நபர் க்ரியா ராமகிருஷ்ணன் தான் என்று சொல்லப்படுகின்றது.
இந்நிலையில், க்ரியா ராமகிருஷ்ணன் உடனான நினைவுகள் குறித்து கோவேறு கழுதைகள், செல்லாத பயணம் உள்ளிட்ட நாவல்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் இமையம், நம்முடன் தொலைபேசி வாயிலாகப் பேசினார். அப்போது, க்ரியா ராமகிருஷ்ணன் தான் சர்வதேசத் தரத்தில் தமிழ்ப் புத்தகத்தை வெளியிட்ட முதல் நபர். பல எடுத்துக்காட்டான புத்தகங்களையும் மொழிப்பெயர்ப்புப் புத்தகங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். ஒரு புத்தகம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறியவர் க்ரியா ராமகிருஷ்ணன்.
![மருத்துவமனையில் தற்காலத் தமிழ் அகராதி பதிப்புடன் க்ரியா ராமகிருஷ்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-kriya-ramakrishnan-writer-imayam-phonein-7202287_17112020101558_1711f_1605588358_780.jpg)
எழுத்தாளர் ந.முத்துச்சாமி, எழுத்தாளர் அசோகமித்திரன், சு.ரா, மௌனி என்று க்ரியா வழியாக மிக முக்கியமான எழுத்தாளர்களை அவர் கொண்டு வந்தார். இந்தியாவில் முதல்முறையாக ’துக்ளக்’ என்னும் நாடகத்தைக் கொண்டு வந்தார். மேலும் பிரான்சில் இருந்து சினிமா தொடர்பான ஒரு புத்தகத்தையும் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த எழுத்துக்களை தமிழ் மொழிபெயர்ப்பு மூலம் அறிமுகம் செய்தவர் க்ரியா ராமகிருஷ்ணன் தான். அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்தால் அதன் வடிவம் தொடங்கி, உபயோகிக்கும் ரப்பர் காகிதம் வரை பிறருக்கு முன்னுதாரணமாக இருக்கும்.
அவருக்கு இணையாக பதிப்பகத்தில் யாரும் இல்லை, யாரும் வரவும் முடியாது. என்னுடைய 16 புத்தகங்களை அவர் வெளியிட்டுள்ளார், க்ரியா வெளியிட்ட அதிகப் புத்தகங்கள் என்னுடைய எழுத்துக்கள்தான்” என்றார். க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு - டிடிவி தினகரன்