பத்தாவது உலகத்தமிழ் மாநாடு ஜூலை 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்றது. இம்மாநாடு தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் வீர வேணுகோபால் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் உதவியுடன் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகம் உள்ளிட்ட உலகம் முழுதும் இருந்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழா மத, ஜாதி சார்பற்ற தன்னார்வலர்களால் நடத்தப்பட்டது. சுமார் 1.6 மில்லியன் டாலர் அளவிற்கான பணத்தை விழாவில் கலந்துகொண்டவர்கள் சொந்தமாக செலவழித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி வழங்கப்பட்டது. அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் 21 ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழ் ஆய்வுக் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டது.
கீழடி என் தாய்மடி என்கிற தலைப்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மேலாண் ஆணையர் ரவி பிள்ளை, யாழ்ப்பாண மேயர் இமானுவேல், ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
88 தமிழ் அறிஞர்கள் மற்றும் பலரும் தமிழ் பற்றிய ஆவணங்களை சமர்ப்பித்தார்கள். அமெரிக்காவில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டது வரலாற்று சாதனை எனலாம். ஆவணங்கள், ஆராய்ச்சி கட்டுரைகளை கணினிமயப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அமெரிக்காவில் தமிழ் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள வருபவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 11ஆவது உலகத்தமிழ் மாநாடு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்த உள்ளோம்.
தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்னும் நம்பிக்கை திரைத் துறையினர் யாரும் இல்லாமல் இம்மாநாட்டில் இவ்வளவு பேர் கலந்துகொண்டதில் நம்பிக்கை வந்துள்ளது" என்றார்.