உலக மக்கள் தொகை தினம் 1989 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக அளவில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் எடுத்துச் சொல்லும் முயற்சியாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
சீனாவை முந்தும் இந்தியா
உலகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் உலக மக்கள் தொகை 787 கோடியே 70 லட்சமாக உள்ளது என அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கீடு தெரிவிக்கிறது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 121 கோடியே 19 லட்சமாக உள்ளது. முதல் இடத்தில் உள்ள சீனா 141 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ளது.
1969ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 54 கோடியே 15 லட்சமாக இருந்தது. 2050ஆம் ஆண்டு இந்திய நாட்டின் மக்கள் தொகை சீனாவை முந்தி 160 கோடியாக இருக்கும் என ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா எச்சரிக்கை
உலக மக்கள் தொகை 2060ஆம் ஆண்டு ஆயிரம் கோடியாக உயர்ந்தால் ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளின் மக்கள் அடிப்படை தேவைகளான உணவு, குடிநீருக்காக பெரும் அவலத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என ஐ.நா எச்சரித்துள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 18 மொழிகளில் பயிற்சி குறிப்பேடுகள் தயாரித்து அதன் அடிப்படையில் மக்கள் தொகை குறித்த விவரம் திரட்டப்படுகிறது.
மக்கள் தொகை பெருக்கத்தால் அடிப்படை தேவைகள், வேலையின்மை, சுகாதார பிரச்னை, இடப்பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி போன்றவைகள் ஏற்படுகின்றன.
உ.பி யின் புதிய சட்டம்
இந்நிலையில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று ( ஜூலை 10) உத்தரப் பிரதேச மாநில சட்ட ஆணையம் அரசுக்கு சில திட்டங்களைப் பரிந்துரைத்துள்ளது.
உ.பி மாநிலத்தில் புதிய மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் நலச் சட்டம் - 2021 கொண்டுவரப்படவுள்ளது. அதில், இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகள் வழங்கப்படும் என்றும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, சலுகைகள் ரத்து செய்யப்படும் வகையில் சட்டம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மக்களின் கருத்துகளை அரசுக்கு தெரிவிக்கவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பற்றிக்கொள்ள கிடைத்த மற்றொரு கரம்... 2ஆவது குழந்தைக்கு தந்தையான பாஜி!