சென்னை: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள சென்னை வர உள்ளனர். இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய உயர் அதிகாரிகள், அனைத்து விமான நிறுவன உயா் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உள்துறை கூடுதல் செயலாளா் முருகன், சென்னை விமான நிலைய இயக்குநா் சரத்குமாா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஆலோசனை கூட்டம் முடிவில் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முறியடிப்பது எவ்வாறு என்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது.
தீவிரவாதிகள் விமான நிலையத்துக்குள் புகுந்து விமானத்தை கடத்த முயற்சிப்பது போலவும் அதை விமான நிலைய பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றிணைந்து முறியடித்து தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி விட்டு பயணிகளையும் விமானத்தையும் பத்திரமாக பாதுகாப்பது போன்ற ஒத்திகை நடத்தப்பட்டது.
இதனால் சென்னை விமான நிலையத்தில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது ஒத்திகை தான் என்று தெரிந்ததும் அமைதி ஏற்பட்டது. இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒத்திகை தான் என்றும், ஆனாலும் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுடன் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் நடப்பதால் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் , தயார் நிலையிலும் இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்திலும் ஒத்திகை நடந்தது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடி படம் இல்லை - கண்டனம் தெரிவித்த கரு. நாகராஜன்