சென்னை: காஞ்சிபுரம் ஓரிக்கை அடுத்த குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் எனப்படும் பட்டாசு உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு திருவிழாவிற்கான பட்டாசுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளும் தயாரிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இந்த குடோனில் 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இந்த பட்டாசு குடோனில் எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து இந்த வெடிவிபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் இந்த வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்து நடந்த போது சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து உயிர் பழியானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரையில் சுமார் 20த்திற்குக் மேற்பட்டோர் மீட்கப்பட்டு தீக்காயங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொத்தம் இது வரையில் இரு பெண் உட்பட 10 பேர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெடி விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவியை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முன்னாள் மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் ஏ.கே மூர்த்தி நேரில் சென்று தனது ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பட்டாசு தொழிற்சாலை நிறுவனத்தின் சொத்துக்களை வருவாய்த்துறை மூலம் அரசு ஆய்வு செய்ய வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு தலா ரூ.1 கோடியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு தலா ரூ.25 லட்சமும் பட்டாசு குடோன் நடத்திய நிறுவனம் தனது சொந்த நிதியாக அளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்க வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை விடுக்கின்றோம்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்து போதிய மருத்துவ வசதிகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் வெடி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்று கண்டறிந்து பின்னரே அரசு அனுமதிகளை வழங்க வேண்டும்" என ஏ.கே.மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார், மாவட்ட தலைவர் உமாபதி, முன்னாள் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள், பாக்கியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!