மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. துறைவாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெறவுள்ளது. அதன் முதல் நாளான இன்று மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களாடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், "சட்டப்பேரவையில் நடக்கவுள்ள நிகழ்வுகள் குறித்து அட்டவணை இன்னும் வழங்கப்படவில்லை. ஜூலை 1ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையை எவ்வாறு அணுகுவது, எந்த பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து என்ன கருத்தை வழங்குவது என்பது குறித்து எங்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்.
சபாநாயகர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர மனு கொடுத்தோம். தற்போது அதை வலியுறுத்த வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம்.
குடிநீர் பிரச்னையால் தமிழகம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் தாய்மார்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னைக்கு திமுக தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் துளி அளவு திட்டத்தைக் கூட அதிமுக அரசு தனது 8 ஆண்டுகால ஆட்சியில் செய்யவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிவித்தார். ஆனால் அதன்மீது நீண்ட காலமாக நடவடிக்கை எடுக்காமல் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட பிறகு, சட்டப்பேரவை கூடுவதற்கு முன்னதாக அவசர அவசரமாக பேருக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். அது எப்போது நடைமுறைப் படுத்தப்படும் அதனால் பிரச்னை தீருமா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.