அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் மாறி விட்டது. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் அனைத்துத் துறைகளிலும் ஜொலிக்க ஆரம்பித்து விட்டனர். இதன் ஒரு பகுதியாக முழுவதும் பெண்களை மட்டுமே கொண்டு இயக்கும் நடமாடும் தேநீர் கடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எம் ஆட்டோ நிறுவனம், கில்லி சாய் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவானதே, இந்த நடமாடும் தேநீர் கடை. மின்சாரத்தால் இயங்கக்கூடிய, ஆட்டோவில் சிறிய கடை போன்ற அமைப்பைப் பொருத்தி டீ மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மின்சார ஆட்டோவை இயக்கி வரும் எம் ஆட்டோ, பெண்களே இயக்கும் நடமாடும் தேநீர் கடையை உருவாக்கியது ஏன் என்ற கேள்விக்கு பெண்கள் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இதற்கான நோக்கம் என்கிறார், எம் ஆட்டோ நிறுவன அலுவலர் யாஸ்மீன்
முதற்கட்டமாக சென்னை - தியாகராய நகர், டிரஸ்ட் புரம், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் 6 ஆட்டோக்கள் இந்த சேவையை தொடங்கி உள்ளன. இந்த நடமாடும் தேநீர் கடைகளில் டீ, காபி, வடை, பப்ஸ் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கி.மீ. வரை இந்த ஆட்டோவில் செல்ல முடியும். இருவர் இருந்தால் போதும், இந்த கடையை எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியும். மற்ற வாகனங்களை விட இந்த மின்சார ஆட்டோவை ஓட்டுவது எளிதாக இருக்கிறது என்கிறார், ஆட்டோ ஓட்டுநர் மோகனா.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் என்ற பாரதியாரின் வரிகளுக்கு இணங்க வாழ்ந்து வரும் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
இதையும் படிங்க: ‘பெண்ணினமே எழு!’ - திமுக தலைவர் ஸ்டாலின் பெண்கள் தின வாழ்த்து