சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலை சுலைமான் சக்ரியா அவென்யூ பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கல்யாண் குமார்(40). இவர் அடிக்கடி தொழில் தொடர்பாக வெளிநாட்டிற்கு செல்வதால் தனது வீட்டில் வயதான பெற்றோர்களை பார்த்துக்கொள்ள சேத்துபட்டு பகுதியை சேர்ந்த லோகநாயகி(48) மற்றும் அவரது உறவினர் ஷாலினி ஆகியோரை வீட்டு வேலைக்கு சேர்த்துள்ளார்.
15 வருடங்களாக வேலை செய்து வந்த லோகநாயகி, ஷாலினி ஆகியோர் கடந்த 24ஆம் தேதி முதல் வேலைக்கு வரவில்லை. பின்னர் கடந்த 5ஆம் தேதி வீட்டை சுத்தம் செய்யும்போது வீட்டிலிருந்த 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 8 சவரன் மதிப்பிலான நகைகள் காணாமல் போயிருப்பது கல்யாண் குமாருக்கு தெரியவந்தது. இதனால் இந்த திருட்டு சம்பந்தமாக கல்யாண் குமார் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் தனது வீட்டில் பணிபுரிந்த லோகநாயகி மீது சந்தேகம் இருப்பதாக கூறி புகாரில் குறிப்பிட்டார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லோகநாயகியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தனது உறவினர் ஷாலினியிடம் கொள்ளையடித்த நகைகள் இருப்பதாக விசாரணையில் தெரிவித்தையடுத்து, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஷாலினியை பிடித்து விசாரிக்கையில் வீட்டில் திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். மேலும் இருவரும் கொள்ளையடித்த சுமார் 15 சவரன் நகைகளை காவல் துறையினர் மீட்டனர். பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: ரிஷிகேஷ் தேவ்திகருக்கு நீதிமன்ற காவல்