சென்னை அனகாபுத்தூர் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் மேரி மெர்சி (22). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சகாய பிரவீன் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்து சில நாள்களுக்குப் பிறகு கணவர் சகாய பிரவீன், அவரது தந்தை பிரபல தொழிலதிபர் வர்கீஸ், தாயார் ஆகியோர் மேரியை கொடுமை செய்தும் வயிற்றில் இருக்கும் கருவைக் கலைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேரி தாம்பரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இதுதொடர்பாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதி துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், மேரியின் மாமனார் வர்கீஸ், அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல் ஆய்வாளரை வைத்து மேரியை வீட்டை விட்டு வெளியேற்ற சதி செய்துள்ளனர்.
மேலும், இதுகுறித்த புகாரை கடந்த மாதம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்தபோது, இந்த புகார் குறித்து ஆயிரம் விளக்கு பகுதி துணை ஆணையரை சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே சங்கர் நகர் பகுதி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் மேரியின் வீட்டிற்கு வந்து, வீட்டு சாவியைக் கொடுத்துவிட்டு வெளியே செல்லும்படி மிரட்டினார்கள். இந்நிலையில், தொடர்ந்து தன்னை கணவர் சகாய பிரவீன் குடுமபத்தினர், காவலர்கள் மிரட்டி வருவதாகக் கூறி மேரி இன்று காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பில் நின்றிருந்த காவலர்கள், அருகில் இருந்த தண்ணீரை எடுத்து மேரியின் மேல் ஊற்றி அவரை மீட்டனர். மேலும், இதுகுறித்து விசாரணைக்காக, காவல் துறையினர் வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர் தீக்குளிக்க முயற்சி!