இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான தவணைத் தொகையை செலுத்தும்படி தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவை அதிர்ச்சியளிக்கின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களின் மனிதநேயமற்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவையாகும்.
பொருளாதார நெருக்கடியானது மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் சிதைத்து இருப்பதுடன் அவர்களின் கவுரவம் மற்றும் கண்ணியத்தையும் குலைத்திருக்கிறது.
கரோனா வைரஸ் நோய் அச்சத்தால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைந்து விட்டது. மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சிறு தொழில்களிலும், சிறு வணிகங்களிலும் செய்திருந்த முதலீடுகள் முற்றிலுமாக அழிந்து விட்டன.
அதனால், மகளிர் வாங்கியிருந்த கடன்களுக்கான தவணைகளை குறித்த காலத்தில் அவர்களால் செலுத்த முடியவில்லை.
எனவே, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தவணை வசூலை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும்.
கடன் தவணை ஒத்திவைப்புக்காலத்தில் தவணைத் தொகை மீதான வட்டியையும் ரத்து செய்யவேண்டும். கிராமப் புறங்களில் தவணை செலுத்தும்படி மிரட்டுவோர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு அரசு ஆணையிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்குக- ராமதாஸ்