தாம்பரம் சாமியார் தோட்டம் பகுதியில் வசிப்பவர் தையல்காரர் சம்மரபுரி. நாள்தோறும் உணவு உண்ணாமல் இருக்க முடிந்த அவரால், மது அருந்தாமல் இருக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழலில், கரோனா ஊரடங்கால் ஒரு மாத காலம் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக, நிம்மதியாக நடந்துகொண்டிருந்த அவரது குடும்ப வாழ்க்கையில் மதுக்கடைகள் திறப்பு மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தியது.
கரோனா நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கொடுத்த 2000 ரூபாய் பணத்தை சம்மரபுரி வாங்கிக்கொண்டு மது வாங்கி குடித்தே தீர்த்துவிட்டார். வீட்டிற்கு வந்தவரிடம் 2000 ரூபாய் பணம் எங்கே என்று மனைவி தீபா(28) கேட்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
கோபத்தில் தீபா வீட்டின் கதவை சாத்திக்கொண்டார். கதவை தட்டியும் திறக்காததால் சம்மரபுரி, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தீபா தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்தார்.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் காவல் துறையினர் தீபாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
'குடி குடியைக் கெடுக்கும்' என்பதோடு மட்டுமல்லாமல் குடி அடுத்தவரின் உயிரையும் எடுக்கும் என்பது இச்சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது.
இதையும் படிங்க: கள்ளச்சாராய வழக்கில் தலைமறைவாகி இருந்த நபர் கைது !