சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றலை சிறப்பிக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலினுள் ‘பேனா நினைவுச்சின்னம்’ வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம், கடந்த ஜனவரி 31 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது அப்பெண் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவர் அலைக்கழிக்கப்பட்டதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், “கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தின்போது பாலியல் தொந்தரவுக்கு ஆளான பின்பு உடனடியாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குச் சென்றேன். அப்போது இவ்வளவு பெரிய கூட்டத்தில் சம்மந்தப்பட்ட நபரை பிடிப்பது எப்படி?, வீடியோ ஆதாரங்கள் உள்ளதா? என காவல் துறையினர் அலட்சியமாக பேசினர்.
எனது தரப்பில் உடனடியாக சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளை வைத்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தும், காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. நீண்ட நேரமாக காத்திருக்க வைத்து ஆய்வாளர் கலைசெல்வி என்பவர் மீண்டும் புகாரை பெற்று விசாரித்தார்.
பாதிக்கப்பட்ட என்னிடம், உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினரிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என தொடர்ந்து காவல் துறையினர் அலட்சியமாகப் பதிலளித்து வந்தனர். சம்பந்தப்பட்ட இடத்தில் பெண் காவல் துறையினர் இல்லையென தெரிவித்த பின்பு, காவலர் ஒருவரை சிசிடிவி காட்சிகள் குறித்து விசாரிக்குமாறு ஆய்வாளர் அனுப்பியதாகவும், அவர் கூறும் இடத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லையென அவர்கள் தெரிவித்தனர்.
மீண்டும் சம்பந்தப்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்ட என்னை அழைத்துச்சென்று எவ்வாறு பாதிக்கப்பட்டீர்கள் என மீண்டும் மீண்டும் தொந்தரவு கொடுத்தனர். இதற்காக நீண்ட நேரமாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காக்க வைத்தனர். புகார் அளித்ததற்கான சி.எஸ்.ஆர் கேட்டபோது, உதவி ஆணையர் அனுமதி பெற வேண்டும் என்று கூறி தொடர்ந்து காத்திருக்க வைத்தனர்.
மேலும் மீண்டும் அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு அனுப்பி அலைக்கழிக்க வைத்தனர். அந்த காவல் நிலையத்திலும் விசாரணை நடத்தாமல் சி.எஸ்.ஆர் தர முடியாது எனத் தெரிவித்தனர். அதேநேரம் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லையென தெரிந்தும், இல்லாத சிசிடிவியை கேட்டு காவல் துறையினர் புகாரை பெற காலம் தாழ்த்தினர்.
இது போன்ற புகாருக்கெல்லாம் உடனடியாக பதிவு செய்ய முடியாது என்றும், அப்போது அழைத்த திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர் பாலியல் தொந்தரவு கொடுத்த கட்சியினர் பெயரை குறிப்பிட வேண்டாம் என தன்னிடம் வற்புறுத்தினார். இவ்வாறாக 10 மணி நேரம் கழித்து புகாருக்கான சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டது.
அடுத்தபடியாக அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு தான் சென்ற போது, அங்கிருந்த காவல் ஆய்வாளர் வீராசாமி பெண்கள் கால் மீது கால் போட்டு உட்காரக் கூடாது என உபதேசம் செய்தார். குறிப்பாக காவல் நிலையத்தில் உயர் அலுவலர் வரும்போது இப்படி கால்போட்டு உட்காரக் கூடாது எனவும், இந்த மரியாதை குறித்து தெரியாதவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் அலைக்கழித்தது தொடர்பாக நான் ஆய்வாளரிடம் கேட்டபோது, ‘என் காவல் நிலையத்தில் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், வெளியே செல்லலாம்’ என அநாகரிகமாக பேசினார்” எனத் தெரிவித்துள்ளார். எனவே இதுதொடர்பாக திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர், ஆய்வாளர் வீராச்சாமி, கலைச்செல்வி உள்ளிட்ட 9 காவலர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் புகாரை உடனடியாக பெற்று விசாரணை நடத்தாமல், 7 மணி நேரம் அலைக்கழித்து புகாரை பெற்றதற்கான ரசீது தந்ததாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "கடலுக்குள் பேனா சின்னம்; அறிவார்ந்த சமூகம் இதை செய்யாது" - சீமான்