கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த பழனிக்குமாரின் மனைவி, சுபஶ்ரீ (34). இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த நிலையில், ஈஷா யோகா மையத்தில் ஒருவார யோகா பயிற்சிக்காக டிசம்பர் 11ஆம் தேதி காலை 6 மணிக்கு சென்றுள்ளார்.
பயிற்சி முடிவடைந்த நிலையில் 18ஆம் தேதி அவரை அழைத்துச்செல்ல பழனிக்குமார் காலை 7 மணிக்குச் சென்றுள்ளார். 11 மணியாகியும் அவர் வராததால், உள்ளே சென்று விசாரித்துள்ளார். அப்போது வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட்டதாக வரவேற்பாளர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பழனிக்குமார் ஆய்வு செய்த போது, சுபஶ்ரீ காலை 9.30 மணிக்கு மற்றொருவாசல் வழியாக வெளியே வந்து ஒரு டாக்சியில் ஏறி சென்றது பதிவாகி இருந்துள்ளது. இதனால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கேயும் அவர் வரவில்லை. அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பதறிய பழனிக்குமார் சுபஸ்ரீயை கண்டுபிடித்து தரவேண்டும் என்று 20ஆம் தேதி ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் 18ஆம் தேதி சுபஸ்ரீ சாலையில் ஓடிச்செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. இதனையடுத்து போலீசார் ஆறு தனிப்படைகள் அமைத்து சுபஸ்ரீயை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று செம்மேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதப்பதாக ஆலந்துறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலத்தை மீட்டெடுத்த பொழுது அவர் அணிந்திருந்த உடை மூலம் சுபஸ்ரீ என சந்தேகம் எழுந்தது.
இதனால் பழனிக்குமாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்தவர் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது சுபஸ்ரீ தான் என்பதை உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து சுபஸ்ரீயின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்குச் சென்று காணாமல்போன பெண் கிணற்றில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இதுகுறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈஷாவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது - உயர் நீதிமன்றம்